மும்பை :
கிளம்பிட்டாங்க அய்யா கிளம்பிட்டாங்க ஐ.பி.எல்., போட்டியில் பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் என கிரிக்கெட்டின் அனைத்து பிரிவிலும் தூள் கிளப்பிய பெங்களூரு அணி, நேற்று 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. "மிடில் ஆர்டர்' வீரர்கள் சொதப்பலால், சச்சினின் மும்பை அணி முதல் தோல்வியை சந்தித்தது.
ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் தற்போது இந்தியாவில் நடக்கிறது. இதில் நேற்று நடந்த 14வது லீக் போட்டியில் சச்சின் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, கும்ளேவை கேப்டனாக கொண்ட, பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியுடன் மோதியது. "டாஸ்' வென்ற மும்பை கேப்டன் சச்சின், பேட்டிங் தேர்வு செய்தார். இரு அணியிலும் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.
ஜெயசூர்யா அதிர்ச்சி:
மும்பை அணிக்கு வழக்கம் போல் சச்சின், ஜெயசூர்யா துவக்கம் கொடுத்தனர். கடந்த இரண்டு போட்டிகளில் ஏமாற்றிய ஜெயசூர்யா (2), இம்முறையும் சொதப்பினார். பின் வந்த தாரே (9) இரண்டு பவுண்டரிகளுடன் திருப்தியடைந்து, காலிஸ் பந்தில் வெளியேறினார்.
சபாஷ் வினய்:
ஸ்டைன் ஓவரில் "ஹாட்ரிக்' பவுண்டரி அடித்து அதிரடியை துவக்கினார் சச்சின். ஆனால் மறுமுனையில் திவாரியை (25) கும்ளே போல்டாக்கினார். பின் வினய் குமார் வேகத்தில் அம்பதி ராயுடு, 3 ரன்களில் அவுட்டானார். அடுத்த இரண்டாவது பந்தில், 25 ரன்கள் எடுத்திருந்த சச்சின், போல்டானார். இதே ஓவரின் கடைசி பந்தில் பிராவோவும் (1) சிக்கினார். ஒரே ஓவரில் வினய் குமார் 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
ஜாகிர் அதிரடி:
பின் வந்த சதீஷ், போலார்டு இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்கும் முயற்சியில் இறங்கினர். பிரவீண் ஓவரில் தலா ஒரு சிக்சர், பவுண்டரி அடித்த போலார்டு (21), ஸ்டைன் பந்தில் அவுட்டானார். 24 ரன்கள் எடுத்திருந்த சதீஸ், டிராவிட்டின் அசத்தலான "கேட்ச்'சில் பெவிலியன் திரும்பினார். ஹர்பஜன் (4) ஏமாற்றினார்.
கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய ஜாகிர் கான், 9 பந்தில் 23 ரன்கள் (ஒரு சிக்சர், 3 பவுண்டரி) எடுத்து, ஐ.பி.எல்., தொடரில் தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தார். 20 ஓவர் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி, 9 விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்தது. வினய் குமார், ஸ்டைன் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
அபார துவக்கம்:
போகிற போக்கில் எட்டிவிடும் இலக்கை விரட்டிய பெங்களூரு அணிக்கு காலிஸ், மனீஷ் பாண்டே ஜோடி, மீண்டும் ஒருமுறை அபார துவக்கம் கொடுத்தனர். ஜாகிர் கான் பந்தில் மனீஷ் பாண்டே பவுண்டரிகளாக விளாச, மலிங்காவை காலிஸ் அடித்து நொறுக்கினார். இதே வேகத்தில் போலார்டின் முதல் ஓவரில் காலிஸ் "ஹாட்ரிக்' பவுண்டரி அடித்து அசத்தினார்.
பெங்களூரு வெற்றி:
அதிரடியில் மிரட்டிய மனீஷ் பாண்டே (40), ஹர்பஜன் சுழலில் வீழ்ந்தார். காலிசுடன், உத்தப்பா இணைந்தார். அபார ஆட்டத்தை தொடர்ந்த காலிஸ், இத்தொடரில் 3வது அரைசதம் கடந்தார். உத்தப்பா (23), விராத் கோஹ்லி (17) விரைவில் திரும்பினர். பின் பெங்களூரு அணி 19.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 155 ரன்கள் எடுத்து எளிதாக வெற்றி பெற்றது. காலிஸ் (66), மார்கன் (7) அவுட்டாகாமல் இருந்தார். ஆட்ட நாயகன் விருதை காலிஸ் தட்டிச் சென்றார்.
பாக்ஸ் செய்தி:
5 ரன், 4 விக்கெட்
நேற்று பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் மும்பை அணி, 9.2 ஓவரில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து 5 ரன்கள் எடுப்பதற்குள், திவாரி, ராயுடு, சச்சின் மற்றும் பிராவோ என அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளை (76/6) இழந்து திணறியது.
"நாட் அவுட்' நாயகன் காலிஸ்
மூன்றாவது ஐ.பி.எல்., தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடி வருபவர் தென் ஆப்ரிக்காவின் காலிஸ். இதில் இதுவரை பங்கேற்றுள்ள நான்கு போட்டிகளிலும் இவர் (65, 89, 44 மற்றும் 66) ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றி பெறச் செய்து, "நாட் அவுட்' நாயகனாக வலம் வருகிறார்.
ஸ்கோர் போர்டு
மும்பை இந்தியன்ஸ்
ஜெயசூர்யா-எல்.பி.டபிள்யு.,(ப)ஸ்டைன் 2(5)
சச்சின்(ப)வினய் குமார் 25(22)
டாரே(கே)பாண்டே(ப)காலிஸ் 9(10)
திவாரி(ப)கும்ளே 25(21)
ராயுடு(கே)பவுச்சர்(ப)வினய் குமார் 3(4)
பிராவோ-எல்.பி.டபிள்யு.,(ப)வினய் குமார் 1(2)
சதீஷ்(கே)டிராவிட்(ப)ஸ்டைன் 24(22)
போலார்டு(கே)கோஹ்லி(ப)ஸ்டைன் 21(19)
ஹர்பஜன்(கே)காலிஸ்(ப)பிரவீண் 4(6)
ஜாகிர்-அவுட் இல்லை- 23(9)
மலிங்கா-அவுட் இல்லை- 0(0)
உதிரிகள் 14
மொத்தம் (20 ஓவரில் 9 விக்.,) 151
விக்கெட் வீழ்ச்சி: 1-6(ஜெயசூர்யா), 2-36(டாரே), 3-71(திவாரி), 4-74(ராயுடு), 5-75(சச்சின்), 6-76(பிராவோ), 7-123(போலார்டு), 8-125(சதீஷ்), 9-135 (ஹர்பஜன்).
பந்துவீச்சு: பிரவீண் 4-0-37-1, ஸ்டைன் 4-0-26-3, காலிஸ் 4-0-35-1, வினய் குமார் 4-0-25-3, கும்ளே 4-0-18-1.
பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ்
பாண்டே(கே)போலார்டு(ப)ஹர்பஜன் 40(27)
காலிஸ்-அவுட் இல்லை- 66(55)
உத்தப்பா(கே)மலிங்கா(ப)ஜாகிர் 23(15)
கோஹ்லி--ரன் அவுட்-(போலார்டு) 17(12)
மார்கன்-அவுட் இல்லை- 7(6)
உதிரிகள் 2
மொத்தம் ( 19.1 ஓவரில் 3 விக்.,) 155
விக்கெட் வீழ்ச்சி: 1-85(பாண்டே), 2-116(உத்தப்பா), 3-136(கோஹ்லி).
பந்து வீச்சு: ஜாகிர் கான் 4-0-18-1, மலிங்கா 4-0-25-0, பிராவோ 3.1-0-35-0, போலார்டு 2-0-24-0, ஹர்பஜன் 4-0-35-1, ஜெயசூர்யா 2-0-16-0.
புள்ளிப்பட்டியல்
மும்பையை வீழ்த்திய, பெங்களூரு அணி பட்டியலில் முதலிடத்தை பிடித்தது.
அணி போட்டி வெற்றி தோல்வி புள்ளி ரன்ரேட்
பெங்களூரு 4 3 1 6 +1.212
மும்பை 3 2 1 4 +1.520
சென்னை 3 2 1 4 +0.604
டெக்கான் 3 2 1 4 +0.433
கோல்கட்டா 4 2 2 4 --0.906
டில்லி 4 2 2 4 -1.027
ராஜஸ்தான் 4 1 3 2 -0.953
பஞ்சாப் 3 0 3 0 -0.380
* மும்பை-பெங்களூரு இடையிலான போட்டி வரை