Monday, January 13, 2014

பொங்கல் பண்டிகை

பொங்கல் பண்டிகை அறுவடைத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. ஆண்டு முழுவதும் நமக்கு உதவி புரியும் இயற்கைக்கும், விவசாயத்திற்குப் பயன்படும் கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் நாளாக  பொங்கலைக் கொண்டாடி மகிழ்கிறோம்.
பொங்கல் என்பதற்கு பொங்கி வழிதல், பொங்குதல் என்பது பொருள். அதாவது புதிய பானையில், புத்தரிசியிட்டு, அரிசியில் இருந்து பால் பொங்கி வழிந்து பொங்கி வருவதால், தை பிறந்துள்ள புத்தாண்டு  முழுவதும் நம் வாழ்வும், வளமும் அந்தப் பால் போன்று பொங்கி சிறக்கும். மகிழ்ச்சியும், திளைப்பும் ஒருசேரப் பல்கிப் பெருகுவதோடு, கழனியெல்லாம் பெருகி, அறுவடை மென்மேலும் அதிகரிக்கும்  என்பதே இந்தப் பண்டிகையின் மேலோங்கிய தத்துவமும், தொன்றுதொட்டு வரும் நம்பிக்கையும்.
பொங்கல் தினத்தன்று வயல்களில் விளைந்து, அறுவடைக்குத் தயாராக இருக்கும் நெற்கதிர்களில் சிறிதளவைக் கொண்டு வந்து வீட்டில் படைத்து வணங்குவதும் வாடிக்கையாக உள்ளது. தவிர,  காடுகளில் விளையக்கூடிய அனைத்து வகை காய்கறிகளையும், பூமிக்குள் விளையும் கிழங்கு வகைகளையும் படைத்து வழிபடுகிறார்கள்.
அறுவடை தொடங்கியதைக் குறிக்கும் வகையில், பயிர் விளைச்சலுக்கு உதவிய மழை, சூரியன், கால்நடைகள் மற்றும் விவசாயிகளுக்கு நன்றி தெரிவித்து அவர்களுக்கு வேண்டியதைச் செய்யும் நாளே  தைப் பொங்கல் திருநாள்.
தைப் பொங்கல் ஒரு நாளுடன் தொடங்கி முடிவதில்லை. பொங்கலுக்கு சில நாட்களுக்கு முன்பே, வீட்டில் உள்ள பழைய பொருட்கள், வேண்டாத பண்டங்களை அகற்றி, வீட்டை லட்சுமிகரமாக்க  வேண்டும். தைப் பொங்கலுக்கு முதல் நாளான போகிப் பண்டிகையினை பழையன கழிதலும் புதியன புகுதலுமானக் கொள்வர். இதன் பின்னரே தை மாதம் முதல் நாளாகப் பொங்கல் தினத்தை ஆரம்ப  அதிர்ஷ்ட நாளாகக் கொள்வது சந்தோஷகரமான மன நிறைவு அன்றோ!
மனித வாழ்விற்குத் தூய்மை மிகவும் அவசியமானது. அகம், புறம் சுத்தமாக அமைந்தால் மட்டுமே தனி மனித வாழ்வு சுபிட்சம் நிறைந்ததாகக் கொள்ளப்படும்.
போகிப் பண்டிகையில் புறச் சூழல் தூய்மையாகின்றது. பொங்கல் திருநாளிலோ நம்மை என்றும் காக்கும் இறைவனுக்கும், ஞாயிறுக்கும் வழிபாடுகள் நடைபெறுகின்றன. தித்திக்கும் பொங்கல்  படைக்கப்படுகின்றன.
ஒளிக் கடவுளை, இருள் அகற்றும் ஜோதிப் பிழம்பான சூரியனை நாம் வணங்குகிறோம். “குற்றம் இல்லாத விரிந்த மலர்ச் சுடரே, ஒளி வடிவானவனே, இனிமை நிறைந்த அமுதமே, மும்மலப்பற்றை அறுத்து என்னை வளர்க்கும் மேலோ” என சிவனை இறைஞ்சுகின்றார் மாணிக்கவாசகர்.
தைத்திருநாளை இறை ஒளியை அவன் திவ்ய நற்கருணையில் வியந்து போற்றுவோம். என்றும் ஒளி பெருகட்டும்.

  நித்தமும் உன்  முத்தம் பெற நான் இருப்பேன் சேய் ஆக நீ இருப்பாய் தாயக.................💖💗