Sunday, January 12, 2014

தைப்பொங்கல்


தைப்பொங்கல் விழா தமிழர்களின் திருநாள். உழவர்களின் இன்பம் பொங்கும் பெருநாள். பூமியில் இயற்கை வளங்களை நிலைக்கச் செய்து உயிரினங்களை வாழவைக்கும் சூரியபகவானுக்கு தமிழர்கள் நன்றி செலுத்தும் இனிய நன்நாள்.

இப் பொங்கல் விழா இவ்வருடம் 14.01.2014  செவ்வாய் அமைவதாக சோதிடம் கணிக்கின்றது.


ஏழு வர்ணக் குதிரைகளில் ஏறி உயர்வு தாழ்வு பாராது, நாம் உயிர் வாழ சக்தியையும், ஒளியையும் தரும் சூரியபகவானுக்கு நன்றி செலுத்தும் உன்னதநாள். நன்றி செலுத்துதல், விருந்தோம்பல் என்பன ஆதி முதல் தமிழர்களினால் பேணிக்காத்துவரும் பண்பாடுகளில் தலை சிறந்து விளங்குபவைகளாகும். அதனால் போலும் சுமார் 2042 வருடங்களுக்கு முன் வாழ்ந்த வள்ளுவப் பெருந்தகை "என் நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் (ஆனால்) உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு" என சிறு எச்சரிக்கையோடு வெளிப்படுத்திச் சென்றுள்ளார்.
ஆதி காலத்திலிருந்து சூரியபகவானை கண்கண்ட தெய்வமாக வழிபட்டு வரும்/வழிபட்டு வந்த இவ் உலகம் அவரின் தோற்றம் பற்றி அறியாதிருந்தமையால்; அவர் எம்மை ஆவலுடன் நேசிக்க சுற்றுலா ஆரம்பிக்கும், (வடக்குத் திசை நோக்கிய பயணத்தை) ஒவ்வொரு புதிய சுற்றையும் அவரின் ஜனன நாளாக (பிறந்தநாளாக) கொண்டாடுவதாகவும் எடுத்துக்கொள்ளலாம். சூரியனில் ஏற்படும் ஒவ்வொரு சிறு நிகழ்வும் பூமியில் வாழும் எம்மை பெரிதாக பாதிக்கின்றன. சூரியன் வாழும் வரைதான் பூமி நிலைத்திருக்கும் என்பதும் விஞ்ஞானிகளின் முடிபு. சூரியன் பூமியைச் சுற்ற (பூமி, சூரியனை மேற்கு கிழக்காக சுற்றுவதுதான் இயற்கையின் நியைதி, ஆனால் பூமியில் இருப்போருக்கு சூரியன் கிழக்கு மேற்காக பூமியைச் சுற்றுவதாக தோன்றும்) ஆரம்பிக்கும் இந் நன்நாளில் நாம் எல்லோரும் சூரியபகவானைச் தரிசித்து அவரின் அருட்பெரும் கொடைக்கு நன்றி செலுத்தி அவரை வாழ்த்தி பிறக்கப் போகும் புதிய சுற்றில் மேலும் பல நன்மைகள் பெற அவரின் ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ளும் விழாவாக தைப்பொங்கல் விழா அமைகின்றது.

ஆதவனின் சக்தியாகிய வெப்பம் மற்றும் வெளிச்சத்தின் சக்தியைக் கொண்டுதான், இப்புவியில் மரம், செடி, கொடி, புல் பூண்டு மற்றும் மிருகம், பறவை இன்னும் புழு- பூச்சி இனங்கள்… ஏன் மனித குலம் வரை அனைத்துமே தோன்றி வளர்ந்து, இப்புவியைத் தழைக்கச் செய்கின்றன. சூரியன் ஒருநாள் ஒளிர மறுத்துவிட்டால், இப் பூவுகமே இருண்டுபோய்விடும். சூரியன் தானாக ஒளிரும் ஒரு நட்சத்திரமாக இருப்பதனால் அதன் ஒளிராத உபகிரகங்கள் அதன் ஒளியைப்பெற்று பிரகாசிக்கின்றன. சூரியன் ஒளிர மறுத்துவிட்டால் இரவில்கூட எமக்கு ஒளிதரும் சந்திரன், வெள்ளி போன்ற கிரகங்களை நாம் காணவே முடியாது போவிடும்.

மேலும், சூரியனின் பேருதவியின்றி எந்த ஓர் உயிரினமும் பூமியில் தனது உணவைப் பெற்றுவிட முடியாது. அதுமட்டும் அன்றி, புவியின் அனைத்து உயிரினங்களின் வாழ்வுக்கும் ஒவ்வாதவற்றை அழித்து, அவற்றின் சுகாதாரமான நலவாழ்வை உறுதி செய்வதும் சூரியனே! இயற்கைப் படைப்புகளின் இயக்கத்திற்கும், அழகின் வெளிப்பாடு, பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக்கும் மூலாதாரக் காவலனாக விளங்குவதும் சூரியன்தான். உலகின் தொன்மைப் படைப்பான வேதங்களில், “சூரியனின் பெருமைகள்" கூறப்பட்டுள்ளன.

சூரிய பகவான் ஆன்மாவை பிரதிபலிப்பவன். ஓருவருக்கு ஆத்மபலம் அமையவேண்டுமானால் சூரியபலம் ஜாதகத்தில் அமையவேண்டும். சூரியனை வணங்கி ஆதித்திய ஷிருதய மந்திரத்தால் இராமன் இராவணனை வெல்லும் ஆற்றல் பெற்றான். வேதங்களில் தலைசிறந்த மந்திரம் காயத்ரீ. காயத்ரீ மந்திரத்துக்கு உரியவன் சூரியன். சூரியநமஸ்காரம் என்ற ஓரு விசேஷமான வழிபாடு முறை உண்டு. இதை செய்வதில் ஆன்மீக பலமும், சரிர பலமும் அடையமுடியும் என்பது அனுபவம் கண்ட உண்மை. சுயநிலை, சுய-உயர்வு, செல்வாக்கு, கௌரவம், ஆற்றல், வீரம், பராகிரமம், சரிர சுகம், நன்நடத்தை நேத்திரம், உஷ்ணம், ஓளி அரசாங்க ஆதரவு முதலியவற்றின் காரன் சூரியன். சூரியன் அக்கினியை அதிதேவதையாக கொண்டவன். கதிரவன், ரவி, பகலவன் என பல பெயர்களால் அழைக்கப்படுபவன். சூரியன் தகப்பனை குறிக்கும் கிரகமாகவும், உத்திரம், உத்திரட்டாதி, கார்திகை நட்சத்திரக்கு உரியவனாகவும். சிம்மம் இராசிக்கு சொந்தக்காரனாகவும். உச்ச வீடாக மேஷத்தையும், நீச்ச வீடாக துலா இராசிகளையும் உடையவனாக ஜோதிட நூல்கள் கூறுகின்றன.

இலங்கையில் சூரிய வழிபாடு, மார்கழி முடிந்து தை பிறக்கின்ற நன்னாளில், தைப்பொங்கல் விழாவாக அனுசரிக்கப்படுகிறது. இதுவே “பொங்கல் திருநாள்’ ஆகும். இந்தக் காலகட்டத்தில் சூரியன், தனது வடக்கு நோக்கிய பயணத்தைத் தொடங்குவதால், அந்தத் தினம் மிகவும் புனிதமானதாகும். சூரியனின் அந்தப் பயணம்தான் பூமத்திய ரேகைக்கு வடக்கில் அமைந்துள்ள நமது நாட்டிற்கு கோடையின் தொடக்கமாகும். கோடைக்காலம் தரும் சூரியனின் வட திசைப் பயணம், அதாவது உத்தராயணம், தேவர்களின் பகல் பொழுது. அதன் தொடக்கம், இந்த “மகர சங்கரமணம்’ என்பதால், புலரும் சூரியனை அன்று வணங்குவது மிகவும் பொருத்தமானது; புண்ணியம் தரக் கூடியது.

தமிழர்கள் வாழும் நாடுகளில் பொங்கல் பண்டிகை, மிகவும் பிரபலமானது. பண்டைக் காலத்திலிருந்தே சூரிய வழிபாட்டை தமிழர்கள் தொடர்ந்து கடைபிடித்து வருகின்றனர். சூரியன் தரும் சாரத்தைக் கொண்டு நாம் விளைவித்த பயிர்களை அறுவடை செய்யும் நேரம் அது. அந்த அறுவடையை சூரியன் நமக்களிக்கும் காரணத்தால், அதற்கு நன்றி செலுத்தும் விதமாக சூரியனை நாம் வழிபடுகிறோம். இதனால்தான் பொங்கல் பண்டிகையை “உழவர் திருநாள்’ என கொண்டாடப்படுகிறது.

பொங்கல் திருநாளன்று பசும்பாலில் உலை வைத்து, அதில் புத்தரிசியும் புதுவெல்லமும் சேர்த்துப் பொங்கல் செய்து சூரியனுக்குப் படைக்கிறோம். அச்சமயத்தில் புதிய அறுவடையாகக் கிடைக்கும் புதுமஞ்சள், புது இஞ்சி ஆகியவற்றைக் கொத்தோடு படைக்கிறோம். வாழைப் பழம், வெற்றிலை, பாக்கு போன்றவற்றையும் ஆதவனுக்கு நிவேதனம் செய்து, அகம் மகிழ்கின்றோம்.

பொங்கல் தினத்துக்கு முன் தினம், பழையன கழித்துப் புதியன புகுத்திப் போகிப் பண்டிகையும், மறுநாள் உழவுக்குத் துணை நின்ற மாடுகளுக்கான மாட்டுப் பொங்கல் மற்றும் கனு எனும் கன்னிப் பொங்கலும் இந்தியாவில் கொண்டாடப்படுகின்றன.

இலங்கையில் மட்டுமல்லாது, உலகின் பல பகுதிகளிலுமே சூரிய வழிபாடு ஏதாவது ஒரு வகையில் இருந்து வருகிறது. கிரேக்க நாட்டினர் சூரியனை, “இவ்வுலகைப் படைத்தவர்’ எனக்கருதி வழிபடுகின்றனர். மெக்சிகோ வாசிகளும் அப்படியே! அவர்களின் திருமணச் சடங்குகளில் சூரிய ஆராதனை, முக்கிய இடம் பெற்றுள்ளது. அது மட்டுமல்ல… கிரேக்கர்கள் நம் பாரத தேசத்தவர் போலவே ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் கிளம்பி வந்து, இரவில் திரும்பிச் செல்பவர் சூரியன் என்று கூறி, அவரை ஆராதிக்கின்றனர்.

வேறு சில வெளி நாட்டினர், சூரியனுக்குத் தேக ஆரோக்கியத்துடன் நெருக்கமான தொடர்பு இருப்பதை உணர்ந்து, “சூரிய உபாசனை செய்தால் கொடிய நோய்கள் தீரும்’ என்ற நம்பிக்கையோடு வழிபடுகின்றனர்.

பண்டைய எகிப்தில் பல சூரியக் கோயில்கள் இருந்துள்ளன. சூரிய வழிபாடு மட்டுமல்லாமல், அங்கு நட்சத்திர ஆய்வுகளும் நடத்தப்பட்டன. இங்கிலாந்தின் பூர்வ குடிகள், திறந்த வெளியில் சூரிய பூஜையை நடத்தினர். வேறு சில நாடுகளில் சூரியச் சிலைகள் அரசனின் உருவத்தில் அமைக்கப்பட்டன. அவற்றுக்குத் தலைக் கவசம், உடற் கவசம் மற்றும் காலணிகள் இருந்தன. நேபாளத்தில் இன்றும் சூரியக் கோயில்கள் உள்ளன. அங்கு முறைப்படி சூரிய வழிபாடு நடைபெறுகிறது.

இவ்விதம், பண்டைக்காலம் தொட்டே உலகின் பல்வேறு நாடுகளில், சூரிய வழிபாடு செய்யப்பட்டு வருகிறது என்பது வரலாறு நமக்கு உணர்த்தும் உண்மையாகும்.

எனவே நாமும் பொங்கல் திருநாளை எழுச்சியுடன் கொண்டாடுவோம். இது தமிழர் திருநாள்! ஒவ்வொரு தமிழரின் இல்லத்திலும் மகிழ்ச்சியொளி வீச, சூரிய பகவான் திருவருள் பொழிவார்.


“எல்லோருக்கும் சூரியபகவானின் நல்லருள் கிடைக்க எம் வாழ்த்துக்கள்”



சூரிய பகவான் பற்றிய புராணக் கதை:
 
இந்த உலகில் ஒளிப்பெறச் செய்யும் கடவுளாக கருதப்படுபவர் சூரிய பகவான். இவருக்கு
சுவர்க்கலா தேவி(உஷாதேவி), சாயாதேவி என்ற இரு மனைவிகள். அவர்களுள், சுவர்கலா தேவிக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் பிறந்தனர். மகன்களுக்கு வைவஸ்தமனு, இயம தர்மராசன் என்றும், மகளுக்கு யமுனை என்றும் பெயர் சூட்டினர்.
சூரியனுடன் சுவர்க்கலா தேவி இல்லறம் இனிது நடத்தினாலும் அவளுக்கு சூரியனுடன் தொடர்ந்து இல்லறம் நடத்த போதிய சக்தி இல்லை. அவளுக்கு சக்தி குறைந்துகொண்டே வந்தது. இதனால் அவள் தவம் செய்ய யோக கானகம் புறப்பட்டாள்.

சுவர்க்கலா தேவி தவம் செய்ய புறப்படுமுன்; தனிடம் இருந்த சிவசக்தியினால், தான் இல்லாத நேரத்தில் சூரியனுக்கு ஏற்படும் மோகத்தை தணிக்க, தன் நிழலையே தன்னை போன்ற ஒரு பெண்ணாக மாற்றி, அதற்கு "சாயாதேவி" என்று பெயர் சூட்டினாள்.

தான் இழந்த சக்தியை பெற தவம் மேற்கொள்ள தயாரான அவள், சாயாதேவியிடம், "நீ என்னை போன்றே சூரியனுக்கு மனைவியாக இருந்து என் முன்று குழந்தைகளையும் கண்போல் வளர்த்து வர வேண்டும்" என்று கூறினாள்.

அவளது வேண்டுகோளை ஏற்ற சாயாதேவி, "சூரியனுக்கு மனைவியாக தங்கள் சொற்படியே நடக்கின்றேன். ஆனால் சூரிய பகவானுக்கு உண்மை தெரிய வேண்டிய நிலை ஏற்பட்டால் நான் உண்மையை உரைப்பதை தவிர வேறு வழியில்லை" என்று கூறினாள். அதற்கு சுவர்க்கலா தேவி உடன்பட்டாள்.

தொடர்ந்து, அவள் தன்னை யார் என்று அறியாத வண்ணம் குதிரை வடிவம் கொண்டு தவம் செய்ய தொடங்கினாள். அதேநேரத்தில் சாயா தேவி, சுவர்க்கலா தேவி போன்று சூரியனுடன் இல்லறம் நடத்த தொடங்கினாள்.

அப்போது சூரியனுக்கு சாயாதேவி முலமாக மூன்று குழந்தைகள் பிறந்தனர். இவர்கள் கிருதத்வாசி, கிருதவர்மா ஆகிய இரண்டு மகன்களும், தபதி என்ற மகளும் ஆவார்கள். இதில் கிருதவர்மா என்ற பெயருடைய ஆண்மகன் பின்னாளில் சனீஸ்வர பகவானாக மாறினார். அவரது சகோதரி தபதி, நதியாக ஓடிக்கொண்டிருக்கிறாள்.

சனி பகவான் கருமை நிறம் கொண்டவர். அவரது செயல்கள் எல்லாம் சூரியனுக்கு எதிராக இருந்ததால் இருவருக்கும் பகை உணர்வு ஏற்பட்டது. சனி பகவானுக்கு சர்வேஸ்வரரான சிவபெருமான் மீது ஆழ்ந்த பக்தி இருந்தது. தான் ஒரு சர்வேஸ்வர நிலையை அடைய வேண்டும் என்று தாயாரிடம் அனுமதி பெற்று காசிக்கு சென்றார் சனி பகவான்.

அவர் காசியில் லிங்கம் ஒன்றை எழுந்தருளச் செய்து பல ஆண்டுகள் கடும் தவம் செய்தார். அவரது பக்தியை கண்டு மெய்சிலிர்த்து போன சிவபெருமான் பார்வதி சமேத ராக காட்சி அளித்தார்.
அப்போது சிவபெருமான் சனிபக வானை நோக்கி, "உனக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டார். அதற்கு சனி பகவான், "எனக்கு என் தந்தையை விட அதிக பலத்தையும், பார்வையையும் தர வேண்டும்" என்றார்.

மேலும், "உடன் பிறந்தவர்கள் உயர்நிலைக்கு சென்றுவிட்டனர். நான் அவர்களை விட பராக்கிரமசாலியாகவும், பலசாலியாகவும் ஆக வேண்டும்" என்றும், "இன்னும் சொல்லப்போனால் தங்களுக்கு அடுத்த இடத்தை எனக்கு அருள வேண்டும்" என்றும் வரம் கேட்டார் சனிபகவான். அவரது வேண்டுகோளை ஏற்ற ஈஸ்வரன், அவருக்கு "சனீஸ்வரர்" என்ற பெயர் விளங்க அருள் பாலித்தார்.
பெயர் பெற்று விட்டால் மட்டும் போதுமா?

நவக்கிரகங்களில் தான் மட்டுமே அதிக பலத்துடன் இருக்க வேண்டும் என்றும், அத்துடன் தன் பார்வை பட்டால் மற்றவர்கள் எல்லா பலமும் இழந்து விடவேண்டும் என்றும் ஈசனிடம் வரம் கேட்டார் சனி பகவான்.

சிவபெருமான், சனிபகவானின் இந்த வேண்டுகோளையும் ஏற்று, நவக்கிரகங்களில் அதிக பலத்தையும், விண்ணுலகம், மண்ணுலகம் அனைத்தையும் அவரது ஆளுகைக்கு உட்படுத்தி ஆட்சிபுரியும் பெருமைக்கு உரிய கடவுளாக்கினார்.

 

  நித்தமும் உன்  முத்தம் பெற நான் இருப்பேன் சேய் ஆக நீ இருப்பாய் தாயக.................💖💗